தேசிய செய்திகள்

மாணவர்கள் மீதான வன்முறையை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பு குழு: ராகுல் காந்தி கோரிக்கை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில்தான் நடைபெற்றது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த 20-ஆம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரையும், மாணவர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி கலைத்தனர்.

மாணவர்கள் மீது தாக்குதல்

இந்த போராட்டத்தின்போது, காவல்துறையினர் எனக் கூறிக்கொண்டு சீருடை அணியாமலும், பெயர் அடையாளப் பட்டை இல்லாமலும் சிலர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல், பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர்களை நோக்கி காவல்துறையினர் ஏகே-47 துப்பாக்கியால் சுட்டதில் சிலர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் தற்போது சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் உள்ள நிலையில், மாணவர்கள் நீதி பெறத் தகுதியானவர்கள் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமித்ஷாவின் உத்தரவில்

மேலும், மாணவர்கள் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் செயல்படும் உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னதாக, மக்களவையில் நேற்று உரையாற்றிய ராகுல் காந்தி, மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில்தான் நடைபெற்றது என்று குற்றம்சாட்டியிருந்தார்.