புதுடெல்லி,
ஆதாரங்களை பரிசீலித்த பிறகே முடிவு எடுக்க முடியும், நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளதா என்பதை ஆதாரங்களை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் என்று சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின்போது, “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. அறங்காவலர் குழுவின் அறிக்கையை காட்டி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் போனது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும்” என மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது.
சீராய்வு மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசின் தந்திர போக்கை காட்டுவதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மத்திய தொல்லியல்துறையினர் தீபத்தூணை ஆய்வு செய்ய தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்ற மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவில்லை என கோவில் அறங்காவல் அலுவலர்கள் கூறினர் என்று மத்திய தொல்லியல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றினீர்களா? இல்லையா? என்று மதுரை கலெக்டர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, ஐஜி பெயர்கள் என்ன? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “தீபம் ஏற்றுவது எனது பணி அல்ல; தீபம் ஏற்றுவதாக நான் ஐகோர்ட்டில் உறுதி அளித்ததை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவதாகவே ஐகோர்ட்டில் தெரிவித்தேன். நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் நீர்த்துப் போக செய்ய முடியாது. தர்கா பாதுகாப்பிற்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது.
தூணில் தீபம் ஏற்றவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம்; மாவட்ட நிர்வாகம் தான் அதற்கு காரணமா என்பதை அறிக்கையை பரிசீலித்து முடிவு செய்யவும்; கோயில் மரபுகள், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. சபரிமலையை சுட்டிக்காட்டி மாவட்ட கலெக்டர் முன்வைத்த வாதத்தை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடுகையில், “மனுதாரர்கள் முன்வைத்த சட்ட ரீதியான வாதங்கள் முழுமையாக சரியானவை அல்ல. நீதிமன்ற உத்தரவை முழுமையாக பின்பற்றினோம்.
தொல்லியல் துறை அதிகாரிகள் மலை உச்சியில் நின்று புகைப்படம் எடுத்தற்கு ஆதாரம் உள்ளது. தூணுக்கு செல்ல தடுத்ததாக தொல்லியல்துறை தாக்கல் செய்த அறிக்கை தவறு. தொல்லியல்துறையுடன் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்பான பட்டியலை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், “ஆதாரங்களை பரிசீலித்த பிறகே முடிவு எடுக்க முடியும், நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளதா என்பதை ஆதாரங்களை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும்” என்று தெரிவித்தனர்.
இதனிடையே விசாரணையின்போது, தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் பெயர் விவரங்களை நீதிபதி அரவிந்த் குமார் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் கார்த்த்கை மாதம் முடிவதற்குள், மீண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நடுநிலையான ஒருவர் மூலம் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-
தீர்ப்பை நிறைவேற்றாதாது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகள் தங்களது கடமையை செய்யத் தவறி விட்டனர். அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தீர்ப்பை மீறி உள்ளனர்.
தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, நாங்கள் முதலில் தெரிவிக்க விரும்பும் வார்த்தை ’அய்யோ (Alas)’ என்பதுதான். தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான வெளிப்பாடாக இந்த வார்த்தை இருக்கும்; மிகுந்த வேதனையுடனும். மனத்துயரத்துடனும் இதனை தெரிவிக்கிறோம்.
சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு என்பது பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பு அல்ல. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு மீறப்படும்போது, அதைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருக்க முடியாது. திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அரசியலமைப்பு சீர்குலைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசும் கோவில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளன.
இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் மீறிய செயலாகும். கோவில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது
இவ்வாறு தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை (28.11.2026) தீபம் ஏற்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மலை முழுவதும் சி.ஆர்.பி.எப். கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கு அமைதியை சி.ஆர்.பி.எப். வீரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய மண்டபத்தில் இருந்து சுடரை எடுத்து சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும் தீபம் ஏற்றும் நேரத்தை ஸ்தானீகர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்றும் நீதிபதிகள் அரவிந்த் குமார், பஞ்சோலி அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிச. 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.