டெல்லி,
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று (வரும் 24ம் தேதி) தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று (2025 - டிசம்பர் 3) தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 2025 டிசம்பர் 1ம் தேதி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.
ஆனால், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் கார்த்திகை தீபத்தினமான 3ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, மலையில் உள்ள தர்கா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.
அதேவேளை, சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, தர்கா நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
அதேபோல், கார்த்திகை திருநாளன்று பக்தர்கள் அனைவரையும் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி மூல மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் மனுதாரர்கள் தரப்பில் அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் 24ம் தேதி கார்த்திகை தினத்திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இறுதி உத்தரவு அல்ல என்று கூறியுள்ள நீதிமன்றம் இடைக்கால உத்தரவாக வரும் 24ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவில் நிர்வாகம், அரசு அதிகாரிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு தேவைப்பட்டால் மத்திய தொழிற்பாதுகாப்புப்படையினரையும் பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, வரும் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.