தேசிய செய்திகள்

ராமர் கோவில் நன்கொடை முறைகேடு; சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புதுடெல்லி

ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிரமாண்ட முறையில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய், தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குகின்றனர். இந்த நன்கொடை, காணிக்கை மற்றும் வரவு, செலவை ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.

காணிக்கை முறைகேடு

இந்த பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அயோத்தி கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நன்கொடை எண்ணும் பணியின்போது நன்கொடை திருடப்பட்டதை கண்டுபிடித்துள்ளது என்று கூறினார்.

சி.பி.ஐ. விசாரணை

அதை பதிவு செய்த நீதிபதிகள், அயோத்தி கோர்ட்டு, விசாரணையை பார்த்து கொள்ளும். மனுதாரர்கள் அந்த கோர்ட்டுக்கு உதவ வேண்டும். வழக்கின் தகுதி குறித்து நாங்கள் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறி மனுக்களை முடித்து வைத்தனர்.

இதேபோன்று நன்கொடை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்று தாக்கலானது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது என குறிப்பிட்ட நீதிபதிகள், இதனை கவனத்தில் கொண்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT