சென்னை,
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ஸ்கீம் (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறி உள்ளது. நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
எனவே சுப்ரீம் கோர்ட்டு, இந்த இரண்டு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ஸ்கீம் என்று கூறியது என்பது பெரும்பாலானோரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட்டு ஸ்கீம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் கூறியதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கூறவில்லை என்கிறது.
மத்திய அரசும் இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் மத்திய அரசு அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள 6 வார கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிந்தது. கெடு முடியும் நாள் வரை காத்திருக்கப்போவதாக தமிழக அரசு ஏற்கனவே கூறியது.
சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளபடி செயல்திட்டத்தை ஏற்படுத்த தவறினால், மத்திய அரசு கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். இன்று மாலை வரையில் மத்திய அரசிடம் இருந்து எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்பதன் பொருள் என்ன? என்பது குறித்து விளக்கம் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வருகிற சனிக்கிழமை மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என தகவல் வெளியாகியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக விவகாரம் எந்தஒரு நேர்மறையான நகர்வும் இல்லாமல் 6 வாரங்களும் நகர்ந்து உள்ளது.