தேசிய செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது; சுப்ரீம் கோர்ட்டு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

டெல்லி,

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக பீகாரிலும் 2ம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, குஜராத், சத்தீஷ்கார், கோவா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது.

இந்த திருத்தப்பணியை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக 10 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2 கட்டங்களாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்குப்பின் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டன. மரணம், இடம்பெயர்வு, இரட்டை பதிவு உள்பட பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டன.

3ம் கட்ட திருத்தப்பணி

அதேவேளை, 3ம் கட்டமாக ஆந்திரா, அருணாச்சலபிரதேசம், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 16 மாநிலங்கள் டெல்லி, சண்டிகர், தாதர் நாகர் ஹவலி & டையு டாமன் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது.

இதனிடையே, பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பட்சி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

சுப்ரீம் கோட்டு வழக்கு

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி சரியான அனைவரையும் உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலுக்கு வழிவகுக்கிறது. இந்த பணி அரசியலமைப்பு சாசனத்திற்கு உயிர்மூச்சு அளிக்கிறது.

இந்த பணி தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உள்ளேயே உள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியின் நோக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.