காந்தி நகர்,
குஜராத் மாநிலம் சூரத்தில் காரின் கதவை கவனக்குறைவாக திடீரென திறந்ததால், பின்னால் பைக்கில் வந்த வியாபாரி ஒருவர் மோதி உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் சூரத்தின் நான்புரா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அமீன் (வயது 56) வியாபாரி. அவர் தனது பைக்கில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் இருந்த பெண், பின்னால் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் திடீரென காரின் கதவைத் திறந்தார்.
எதிர்பாராத விதமாக கார் கதவு திறக்கப்பட்டதால், பின்னால் வந்த முகமது அமீன் நிலைதடுமாறி கார் கதவின் மீது பலமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களால் உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இச்சம்பவம் குறித்து சூரத் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரின் கதவை கவனக்குறைவாக திறந்த பெண்ணின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்களை நிறுத்தும்போது கதவுகளை கவனமாக திறக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.