திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதில் வாரத்தின் இறுதி நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்க ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் நேற்று கோவிலில் பக் தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்களுக்காக திருப்பதியில் உள்ள சீனிவா சம், விஷ்ணு நிவாசம் ஆகிய தங்கும் விடுதி கள், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச (சர்வ) தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை வழியாக நடந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் 'திவ்ய' தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அங்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் 1,200-வது படியில் கட்டாயமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரம்
இந்தநிலையில் நேற்று திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட் மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிருஷ்ணதேஜா விருந்தினர் மாளிகை வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 18 மணியில் இருந்து 24 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் அலிபிரி டோல்கேட்டில் ஏராளமான கார்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்தன.
நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 264 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 29 ஆயிரத்து 410 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை 4 கோடியே 28 லட்சம் ஆகும்.