இம்பால்,
மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. மாநில முதல்-மந்திரியாக கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றார்.
அதேவேளை, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப்படையினர் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், மணிப்பூரின் சரசந்த்பூர் மாவட்டம் ஹெங்லெப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.