தேசிய செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேரின் சஸ்பெண்டு உத்தரவு ரத்து

காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ், 8 எம்.பி.க்கள் இடைநீக்க முடிவை திரும்ப பெறுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என அவையில் இன்று கோரினார்.

புதுடெல்லி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இரு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல்கட்ட கூட்டத்தொடரின்போது, பிப்ரவரி 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது அவர், பிரதமர் மோடியையும், பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் விமர்சித்தார். தொடர்ந்து இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் அறிவித்ததை குறிப்பிட்டு, அமெரிக்காவிடம் மோடி சரணடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவை தலைமை செயலாளரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களை கிழித்து, அவை தலைவா் இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீசினர்.

இதனால், அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பெயா்களை குறிப்பிட்டு அவர்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்ய சபாநாயகர் தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ், 8 எம்.பி.க்கள் இடைநீக்க முடிவை திரும்ப பெறுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என அவையில் இன்று கோரினார்.

அவையில் நடந்த விஷயங்கள் வருத்தத்திற்குரியவை. அவை சுமுகத்துடன் நடைபெற தங்களுடைய கட்சி தயாராக உள்ளது என கூறினார். அப்போது மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி ரிஜிஜு குறுக்கிட்டு, சுமுகத்துடன் அவை நடைபெறுவதற்கு வரைமுறையை வகுக்க வேண்டும் என கூறினார்.

இதனையடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, போஸ்டர்களோ, புகைப்படங்களோ அல்லது ஏ.ஐ. உருவாக்க படங்களையோ அவையிலோ அல்லது நாடாளுமன்ற வளாகத்திலோ காட்ட கூடாது என உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று கூறினார்.

உலகின் பெரிய ஜனநாயகம் கொண்ட நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகள் சுமுகத்துடன் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார். இதன்பின், 8 எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யும் தீர்மானம் ஒன்றை ரிஜிஜு தாக்கல் செய்தார்.

இதன்படி, குர்ஜீத் சிங் ஆஜ்லா, ஹிபி ஈடன், கிரண் குமார் ரெட்டி, அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், மாணிக்கம் தாகூர், பிரசாந்த் படோல் மற்றும் டீன் குரியகோஸ் ஆகிய 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. சு. வெங்கடேசன் ஆகிய 8 பேரின் சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.