தேசிய செய்திகள்

நடத்தையில் சந்தேகம்... தூங்கி கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற டிரைவர்

பர்குண்டாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா கடகேரி கிராமத்தை சேர்ந்தவர் பர்குண்டா (வயது 39). இவரது மனைவி ஷோபா (35). இந்த தம்பதிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஷோபா ஒரு பள்ளியில் உணவு சமைக் கும் வேலை செய்து வந்தார். பர்குண்டா டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

பர்குண்டாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் மது அருந்திவிட்டு வந்த பர்குண்டா, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றி, பர்குண்டா தனது மனைவி ஷோபாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து அவர்கள் தூங்க சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் எழுந்த பர்குண்டா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி ஷோபாவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஷோபா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த பர்குண்டா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஷோபா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக அதானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஷோபாவின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பர்குண்டாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.