புதுடெல்லி,
தமிழ்நாட்டிற்கு விகிதாச்சார அடிப்படையில் தரவேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன் ஜி.உமாபதி, வக்கீல் பி.கருணாகரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில், “காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த ஜூலை 30-ந்தேதி பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தவும், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீரை திறந்துவிட்டு, 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அதாவது 4.536 டி.எம்.சி நீர் பிலிகுண்டுலுவில் வந்து சேருவதை உறுதி செய்யவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
நடப்பு பாசன ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு 12-ந்தேதி வரை வரையிலான காலத்திற்கு பிலிகுண்டுலுவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை யான 26.954 டி.எம்.சி நீரை விழுக்காட்டின் அடிப்படையில் உடனே வழங்குமாறு கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். நடப்பு பாசன ஆண்டில், தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு, காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில், கர்நாடகாவின் அணைகளில் பாயும் நீரை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கண்காணிக்கவும், பிலிகுண்டுலுவில் குறிப்பிட்ட மாதம் அல்லது 10 நாட்களுக்கான நீர் திறப்பை உறுதிசெய்ய கர்நாடகத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஜி.உமாபதி ஆகியோர் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 10-ந்தேதி முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி மூத்த வக்கீல் பி.வில்சன் முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து வருகிற 17-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காவிரியில் வினாடிக்கு 12,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு விகிதாச்சார அடிப்படையில் தரவேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே உள்ள பற்றாக்குறை நீரை கணக்கில் கொண்டும், விகிதாச்சார அடிப்படையிலும் தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் மொத்தம் 36.63 டி.எம்.சி. கிடைக்கும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.