புதுடெல்லி,
டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை, தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை இன்று டெல்லியில் சந்தித்து, தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டோம்.
குறிப்பாக, 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகப் படகுப் போட்டி (Sailing) மற்றும் அலைச்சறுக்குப் போட்டி (Surfing) ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்கான வாய்ப்பினை வழங்கிடக் கேட்டுக்கொண்டோம்.
மேலும், 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை (National Games 2029) தமிழகத்தில் நடத்துவது, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மாநில விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 5 மாவட்டங்களில் சர்வதேசத் தரத்திலான 400 மீட்டர் செயற்கை ஓடுதளங்கள், 5 மாவட்டங்களில் சர்வதேசத் தரத்திலான பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கங்கள் அமைத்தல்;
சென்னை அருகே உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TNPESU) பல்வேறு விளையாட்டுகளுக்குத் தேசிய சிறப்பு விளையாட்டு மையங்களும், திருச்சியில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் தற்காப்புக் கலை விளையாட்டுகளுக்கு மையங்களும் நிறுவுதல்;
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சர்வதேசத் தரத்திலான உள்ளரங்க சைக்கிளிங் பந்தயப் பாதைகள் (Indoor Cycling Velodromes), அக்வாட்டிக் ஸ்போர்ட்ஸ் வளாகங்கள், வில்வித்தைப் பயிற்சி மையங்கள், 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையங்கள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு மையம், சர்வதேசத் தரத்திலான ஸ்போர்ட்ஸ் கிளைமிங் சென்டர் என முக்கிய விளையாட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி கோரி முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கும், இந்தியாவின் விளையாட்டு கட்டமைப்பு பாரம்பரியத்திற்கும் தமிழ்நாடு சிறந்த பங்காற்றும் என்கிற குறிக்கோளை முன்வைத்துக் கலந்துரையாடினோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.