தேசிய செய்திகள்

‘தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ - அமித்ஷா உறுதி

தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற வாதம் தவறானது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மக்களைவையில் மத்திய உள்துறை மந்திரி பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தொகுதி மறுவரையறையால் தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற வாதம் தவறானது. தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் ஒருபோதும் குறையாது. தொகுதி மறுவரையால் தென் மாநிலங்களுக்கு பலன் கிடைக்கும்.

543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உள்ளது. இது 7.18% ஆகும். தொகுதி மறுவரையறைக்கு பின் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும். இது 7.23% ஆகும்.

இப்போது செயல்பட்டால்தான் 2029 மக்களவை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு அமலாகும். தவறான கருத்துகளுக்காக விளக்கம் தந்துள்ளேன். மசோதா மீதான விவாதத்திற்கு நாளை விரிவாக பதிலளிக்கிறேன். தமிழக எம்.பி.க்கள் கருப்பு சட்ட அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்காகவே இந்த விளக்கம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.