பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தியாவசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 40). இவர், அப்பகாரனஹள்ளி கேட் பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடைக்கு அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான முனியப்பா அடிக்கடி வந்து கடனுக்கு டீ குடித்து விட்டு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த 12-ந் தேதியும் மஞ்சுநாத் கடைக்கு முனியப்பா வந்துள்ளார்.
அப்போது மஞ்சுநாத்திடம் டீ தரும்படி முனியப்பா கேட்டுள்ளார். உடனே ஏற்கனவே டீ குடித்ததற்காக ரூ.200 கடன் உள்ளது. முதலில் ரூ.200 கடனை கொடுக்கும்படி முனியப்பாவிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த முனியப்பா. அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மஞ்சுநாத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலை, மார்பில் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்தது.
இதற்காக தொட்டபள்ளாப்புராவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மஞ்சுநாத் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்து விட்டார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த முனியப்பாவை தொட்ட பெலவங்களா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ரூ.200 கடனை திரும்ப கேட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மஞ்சுநாத் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. ஏற்கனவே தனது தாயை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு முனியப்பா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்திருந்த அவர், தற்போது டீக்கடை உரிமையாளரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.