தேசிய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு 4 - பீகார் இளைஞர்களின் கனவு நிறைவேறுமா: தேஜஸ்வி யாதவ் கேள்வி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான காலி பணியிட அறிவிப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பாட்னா,

தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஊழல் மலிந்த இந்த 'இரட்டை என்ஜின்' அரசாங்கம், எவ்வித காரணமுமின்றி ஆசிரியர் தகுதி தேர்வு (TRE-4) தேர்வை மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து, இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடி வருகிறது. தேர்வர்களின் வயது வரம்பு கடந்து கொண்டிருக்கிறது. இதனால் இளைஞர்களின் பொறுமையும் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வானளாவிய பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வு 4 (TRE-4) என்பது இளைஞர்களின் நலன்களோடு நேரடியாக தொடர்புடைய ஒரு முக்கிய விவகாரமாகும்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான காலி பணியிட அறிவிப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.

அதிகார பதவிகளை பரிமாறிக்கொள்ளும் இந்த நாற்காலி ஆட்டத்தில், பீகாரை சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்களின் உரிமைகள், கோரிக்கைகள், லட்சியங்கள், நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை பாஜக-ஐக்கிய ஜனதா தளம் அரசாங்கம் பலியிட்டுவிட கூடாது.

இவ்வாறு அதில் தெரிவித்தார்.