தேசிய செய்திகள்

கோவை, திருப்பூரில் மு.க. ஸ்டாலினுடன் தேஜஸ்வி யாதவ் பிரசாரம்

திருச்சி மாவட்டத்தில் துறையூர் நகரில் இன்று மாலை நடைபெறும் கூட்டமொன்றில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

புதுடெல்லி

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதில், ஆளும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில், இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதன்படி, கோவை, திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

அவர் மதசார்பற்ற முன்னேற்ற கூட்டணிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்கிறார். திருச்சி மாவட்டத்தில் துறையூர் நகரில் இன்று மாலை நடைபெறும் கூட்டமொன்றில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் அவர், பின்னர் ஹெலிகாப்டரில் துறையூர் செல்கிறார்.

இதேபோன்று, வருகிற 20, 21 ஆகிய நாட்களில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராவதற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

அந்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. தலைமைக்கு அவர் ஆதரவு கேட்கிறார். பல்வேறு பேரணிகளிலும் பங்கேற்க உள்ளார். அப்போது, தி.மு.க. அரசின் நிர்வாகம், நல திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். டெல்லி ஆம் ஆத்மி தலைமை வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. இதனால், அரசியல் பிரசாரத்தில் சூடு பிடித்துள்ளது.