தேசிய செய்திகள்

தெலுங்கானா: 15 வயது சிறுமி கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை; 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

குற்றவாளிகள் அனைவரும், தெலுங்கானாவின் செரியல் நகர் மற்றும் தூள்பேட்டை கிராம பகுதியை சேர்ந்தவர்கள்.

ஐதராபாத்

தெலுங்கானாவில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் தூள்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் விவசாய பணிக்கு சென்றனர். இதனால், சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட ஒரு கும்பல் சிறுமியை கடத்திச்சென்றனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

சிறுமியை அருகே உள்ள கிராமத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இரவு முழுவதும் அந்த கொடூரத்தை நிகழ்த்திய அவர்கள், மறுநாள் காலை, அந்த சிறுமியின் சொந்த கிராமத்தில் அவரை இறக்கி விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

கைது

வீட்டுக்கு வந்த சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.

3 சிறுவர்களும் அரசால் நடத்தப்படும் சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர். குற்றவாளிகள் அனைவரும், தெலுங்கானாவின் செரியல் நகர் மற்றும் தூள்பேட்டை கிராம பகுதியை சேர்ந்தவர்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT