தேசிய செய்திகள்

தெலுங்கானா: தங்கும் விடுதியில் பெண் டாக்டர் கொலை - இன்ஸ்டாகிராம் நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

தங்கச்சங்கிலியை திருப்பி கொடுக்க ஐதராபாத் வருமாறு ஸ்ருஜனாவை ரவிக்குமார் அழைத்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட் டம், சாந்திநகரை சேர்ந்தவர் ஸ்ருஜனா (வயது 27). இவர் ஹனுமகொண்டாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலை குழந்தைகள் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ஸ்ருஜனாவுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ரவிக்குமார் என்ற வாலிபர் பழக்கமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி ஸ்ருஜனாவிடம் இருந்து தங்க சங்கிலி ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார்.

இதனிடையே ஸ்ருஜனா தனது தங்கச் சங்கிலியை திருப்பித் தருமாறு ரவிக்குமாரிடம் கேட்டுள்ளார். கடந்த மாதம் 29-ந்தேதி ஸ்ருஜனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரவிக்குமார், தங்கச்சங்கிலியை திருப்பி கொடுக்க ஐதராபாத் வருமாறு அழைத்துள்ளார்.

மியாபூரில் உள்ள விடுதி ஒன்றில் ரவிக்குமார் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் ஸ்ருஜனா கடந்த 30-ந்தேதி ரவிக்குமார் தங்கியிருந்த அறைக்கு சென்றார். அப்போது தங்கச்சங்கிலியை திருப்பி தருமாறு ரவிக்குமாரிடம் அவர் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ரவிக்குமார் ஸ்ருஜனாவை கட்டிலில் தள்ளி தலையணையால் முகத்தில் அழுத்தி மூச்சடைக்க வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ஸ்ரூஜனா வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ருஜனாவின் செல்போன் எண் மூலம் அவர் மியாபூரில் உள்ள விடுதிக்கு சென்றிருந்ததை கண்டறிந்தனர். அங்கு சென்று பார்த்தபோது ஸ்ருஜனா படுக்கையில் சடலமாக கிடந்தார். போலீசார் ரவிக்குமாரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, தப்பியோடிய ரவிக்குமாரை போலீசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரால் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT