தேசிய செய்திகள்

தெலுங்கானா: ரூ.100 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி - ஊழல் தடுப்பு பிரிவு சோதனையில் கண்டுபிடிப்பு

குடிமைப் பொருள்துறை அதிகாரி குவித்த ரூ.100 கோடி சொத்துகள் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனையில் சிக்கியது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி மேலாளராக பணியாற்றி வருபவர் நரசிம்ம ராவ். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நரசிம்ம ராவுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் நரசிம்ம ராவ், தனது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துகள் இருப்பது ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது.

மேலும் அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். கம்மம் மற்றும் ஐதராபாத்தில் நரசிம்மராவின் உறவினர்கள், பினாமிகளின் பெயர்களில் பல மாடிக் கட்டிடங்களும், காலி மனைகளும் இருப்பது கண்டறியப்பட்டது.

நரசிம்ம ராவின் வீட்டில் இருந்து 360 கிராம் தங்கம், 331 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள மூன்று வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த மதுபாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டன.

அவர் 2011-ல் தொழில்நுட்ப உதவியாளராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் இவ்வளவு குறுகிய காலத்தில் அரசு அதிகாரி நரசிம்ம ராவ் இந்த அளவிற்கு சொத்துகளை குவித்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT