ai image 
தேசிய செய்திகள்

தெலுங்கானா: ஊழல் வழக்குகளில் சிக்கி... நீதிமன்ற காவலில் 70 அரசு ஊழியர்கள்

அவர்களில் 34 பேர், ஐதராபாத் நகரில் உள்ள சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஐதராபாத்

தெலுங்கானாவில் ஊழல் வழக்குகளில் சிக்கி நீதிமன்ற காவலில் உள்ள அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 70 ஆக உள்ளது.

தெலுங்கானா மாநிலம் தனியாக உருவாகி, இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறை

அரசு ஊழியர்கள் பணியின்போது லஞ்சம் வாங்குவதற்கு எதிரான நடவடிக்கையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்கள் லஞ்சம் வாங்கும்போது அவர்கள் சிக்குகின்றனர். கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்படி, கோடிக்கணக்கான பணமதிப்பிலான ஊழலில் ஈடுபட்டு, அதுதொடர்புடைய வழக்குகளில் சிக்கிய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 70 ஆக உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த எண்ணிக்கை மிக அதிக அளவாகும் என தகவல் தெரிவிக்கின்றது.

ஜாமீன் மனுக்கள்

இதில், தனி நபர்களுக்கு எதிராக விசாரணை நடந்து, எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 34 பேர், ஐதராபாத் நகரில் உள்ள சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள நபர்கள் கம்மம் மற்றும் கரீம்நகரில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

காங்கிரஸ் அரசின் பதவிக்காலத்தில், ஊழல் செய்த அரசு ஊழியர்களின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நபர்களின் ஜாமீன் மனுக்களுக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

நீதிமன்ற காவல்

இந்த நபர்கள், குறைந்தது 40 முதல் 60 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் இருப்பார்கள் என அதுதொடர்பான அறிக்கை தெரிவிக்கின்றது.

எனினும், வழக்கு தொடர்பான தனிநபர் விவரங்கள், சொத்து மதிப்புகள் அல்லது வெவ்வேறு அரசுகளில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

SCROLL FOR NEXT