தேசிய செய்திகள்

தெலுங்கானா பள்ளி மாணவர்களுக்கு காலை உணவில் போண்டா,தோசை,பூரி... ஜூன் 12 முதல் வழங்கப்படுகிறது

மாணவர்களுக்கு முறையான ஊட்டச்சத்தை வழங்கும் வகையில் இந்தப் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் இடை நிலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட் டத்தைத் ஜூன் 12-ம் தேதி முதல்-மந்திரி ரேவந்த்ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். இந்தகாலை உணவுத் திட்டத்திற்கான உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் போண்டா, தோசை, பூரி, சிறுதானிய இட்லி, உப்புமா ஆகியவை அடங்கும். மாணவர்களுக்கு தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு முறையான ஊட்டச்சத்தை வழங்கும் வகையில் இந்தப் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்றுண்டிகளில் சட்னி, சாம்பார், கலவை காய்கறி குருமா ஆகியவை வழங்கப்படும்.

இடைநிலை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவை வழங்குவதற்காக இந்த ஆண்டு காலை உணவுத் திட்டத்திற்காக அரசு ஆண்டு தோறும் ரூ.120 கோடி செலவிடும். மாநிலத்தில் உள்ள 1.92 லட்சம் இடைநிலை மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இது வரை, நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தெலுங்கானாவில், இடைநிலை மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதிய உணவுடன் காலை உணவையும் வழங்கவேண்டும் என்ற முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் முடிவின்படி, இது இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.