தேசிய செய்திகள்

கருக்கலைப்பு செய்ய மறுப்பு: மனைவி-மகள்களுக்கு நடந்த கொடூரம்.. கணவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மனைவி, மகள்களை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பொன்னேலு கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் பிணமாக மிதந்தது. விசாரணையில் நீச்சல் குளமே அந்த குடும்பத்துக்கு சொந்தமானதுதான் என்பதும், தாய்-மகள்களுக்கு நீச்சல் தெரிந்த நிலையில் அவர்கள் இறந்து கிடந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்த இளம்பெண்ணின் கணவர் மீது, அவரது மாமனார் போலீசில் புகார் அளித்திருந்தார். தனது மகள் மூன்றாவதாக கர்ப்பமாக இருந்ததாகவும், அதுகுறித்து கணவன்-மனைவி இடையே தகராறு நடந்ததாகவும், திடீரென மகள் இறந்ததில் மருமகன் அசாருதீன் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் கூறி இருந்தார். இந்தநிலையில் அசாருதீனிடம் போலீசார் துருவித்துருவி நடத்திய விசாரணையில், அவர் மனைவி, மகள்களை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் தனது வாக்கு மூலத்தில் கூறுகையில், “நான் வரங்கல்-கம்மம் தேசிய நெடுஞ்சாலை பக்கத்தில் நீச்சல் குளத்தை நிர்வகித்து பிழைப்பு நடத்துகிறேன். 2 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு என் மனைவி பர்ஹத் மேலும் 2 முறை கருத்தரித்தார். மீண்டும் பெண் குழந்தைகள் பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் நான் கருக்கலைப்பு செய்ய சொல்லிவிட்டேன். தற்பொழுது 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் என் மனைவி கருத்தரித்தார். பெண் குழந்தை பிறக்கும் என்று எண்ணிய நான் மீண்டும் கருக்கலைப்பு செய்யும்படி என் மனைவியிடம் கூறினேன்.

ஆனால் இந்த முறை அவள் அதற்கு சம்மதிக்காததால் எங்களுக்குள் கடந்த ஒரு மாதமாக தகராறு ஏற்பட்டது. நான் எவ்வளவு எடுத்துக்கூறியும் கேட்காததால் என் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டேன். கடந்த புதன்கிழமை மனைவி, பிள்ளைகளை எங்கள் நீச்சல் குளத்துக்கு அழைத்துச் சென்றேன். முதலில் மனைவியை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொன்றேன். ஆனால் அவர் இறந்த பிறகு பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்பதால் பிறகு என் பிள்ளைகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டேன். இவர்கள் இயற்கையாக நீரில் மூழ்கி இறந்துவிட்டார்கள் என்று நம்ப வைத்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் என் மாமனார் போலீசில் புகார் செய்துவிட்டார். நான் சிக்கிக்கொண்டேன்” என்று அசாருதீன் கூறி உள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.