தேசிய செய்திகள்

தெலுங்கானா: பாலியல் வன்கொடுமை முயற்சியில் இளம் நர்ஸ் படுகொலை; நீதி கேட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

உஸ்மானியா மருத்துவமனையில் பா.ஜ.க. தொண்டர்கள் நீதி கேட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஐதராபாத்

தெலுங்கானாவில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் இளம் நர்ஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நீதி கேட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் துக்குகுடா நகரில் 21 வயது நர்ஸ் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் 7 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு மருத்துவமனையிலேயே தங்க இடம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நர்ஸ் தங்கியிருந்த அறைக்குள், சாய்னா உல்லா (வயது 35) என்பவர் அத்துமீறி நுழைய முயன்றார்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் சாய்னா பீகாரை சேர்ந்தவர் ஆவார். நர்ஸ் தனியாக இருப்பது பற்றி அறிந்ததும், ஜன்னல் வழியே அறைக்குள் நுழைய முயன்றார். இதனை கவனித்த நர்ஸ் கத்தி, கூச்சலிட்டு உள்ளார். அவரை சாய்னா பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து இருக்கிறார்.

இதனால் அச்சமடைந்த நர்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதவி கேட்டு சத்தம் போட்டிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சாய்னா, நர்சை தாக்கி படுகொலை செய்து விட்டு, சம்பவ பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் நேற்று பணிக்கு வரவேண்டியவர் வராத நிலையில், மருத்துவமனை ஊழியர் ஒருவர் நர்சின் அறைக்கு சென்றார்.

தீவிர விசாரணை

அது உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால், ஜன்னல் வழியே பார்த்திருக்கிறார். அப்போது நர்ஸ் தரையில் கிடந்துள்ளார். பிற ஊழியர்கள் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டபோது, நர்ஸ் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுபற்றி நர்சின் பெண் உறவினர் சந்தேகம் தெரிவித்து, போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடந்தது. இதில், சாய்னாவை கைது செய்தனர். அவர் உண்மையை ஒப்பு கொண்டார். இதுதொடர்பாக, உஸ்மானியா மருத்துவமனையில் பா.ஜ.க. தொண்டர்கள் நீதி கேட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.