புதுடெல்லி,
'நீட்' எனப்படும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மே 3ல் நாடு முழுதும் நடந்தது. இதை, 22 லட்சம் பேர் எழுதினர். இதற்கிடையே தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்து விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பலர் கைதுசெய்யப்பட்டனர். இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.
நீட் மறுதேர்வு, வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமக் இருக்க இந்த முறை பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், இன்டர்நெட் வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மே3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியதால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஜூன் 22-ம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், டெலிகிராமில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியை (message-editing feature) வருகிற 30-ந்தேதி வரை முடக்குமாறு அந்த தளத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.