இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.நீட் மறுதேர்வு, வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் இருக்க இந்த முறை பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியதால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டெலிகிராம் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: , “சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள சக்திகளை ஒன்றிணைக்கும் புதிய கருப்பு இணையமாக டெலிகிராம் உருவெடுத்துள்ளது. குற்றவாளிகள் தீங்கிழைக்கும் இணையதள இணைப்புகளைப் பகிர்வதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் டெலிகிராமை பயன்படுத்துகின்றனர். இதனால், அவர்களை கண்காணித்து அடையாளம் காண்பது சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு சவாலாக மாறியுள்ளது.
டெலிகிராமில் உள்ள தனியுரிமை மற்றும் அடையாள மறைப்பு வசதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சாதகமாக உள்ளன.டெலிகிராம் பயனர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் பயனர் முகவரி உள்ளிட்ட அடையாள விவரங்களை தனியுரிமை அமைப்புகள் மூலம் மறைக்க முடிகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட கணக்குகளுக்குப் பின்னால் இருப்பவர்களை கண்டறிவது புலனாய்வு அமைப்புகளுக்கு கடினமாகிறது.
இந்த தனியுரிமை அம்சங்கள் போதைப்பொருள் கடத்தல், இணையக் குற்றங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம், குழந்தைகள் மீதான சுரண்டல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் போலி அடையாளங்களை பயன்படுத்தி கணக்குகள் உருவாக்கி நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். டெலிகிராம் மூலமாக நடைபெறும் இணைய மோசடிகள் குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.அதோடு, சைபர் குற்றங்கள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை பெறவும் பரிமாறவும் டெலிகிராம் சேனல்கள் பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.