தேசிய செய்திகள்

கேரளாவில் கோவில் யானை மீது மின்னல் தாக்கி உயிரிழப்பு

பல்லாட்டு பிரம்மதத்தன் உயிரிழந்த செய்தியை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

கோட்டயம்,

கோட்டயத்தில் மின்னல் தாக்கியதில் 'பிரம்மதத்தன்' யானை பரிதாபமாக உயிரிழந்தது.

மின்னல் தாக்கி

கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் ஏராட்டுப்பேட்டா அருகே மேலம்பாறாவில் கோவில் திருவிழாக்களின் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும் வளர்ப்பு யானையான 'பல்லாட்டு பிரம்மதத்தன்' யானை கட்டப்பட்டிருந்தது.

இந்த யானைக்கு சுமார் 45 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. மதம் பிடித்ததை தொடர்ந்து அந்த யானை ஓய்வெடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையின்போது, திடீரென யானையின் மீது மின்னல் தாக்கியது. இதில் அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. அங்கு வந்த கால்நடை மருத்துவர் யானை இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

பிரம்மதத்தன் யானை

298 செ.மீ உயரம் கொண்ட பிரம்மதத்தன் யானை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்திலிருந்து கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்டது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு கோவில் திருவிழாக்களில் முக்கிய இடம்பிடித்திருந்த இந்த யானை, புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவின் ஒரு பகுதியான பரமேக்காவு ஊர்வலத்தில், இரவு நேரத்தில் சாமியின் சிலையை சுமந்து செல்லும் சிறப்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்லாட்டு பிரம்மதத்தன் உயிரிழந்த செய்தியை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் யானையை பார்த்து கண்ணீர் சிந்தினர்.

SCROLL FOR NEXT