தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா..? பெங்களூருவில் கைதான பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைகளில் ஏந்தியபடி எடுத்த புகைப்படங்களும் அவரது செல்போனில் இருந்தன.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா பண்ணிகோடு கிராமத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபரான சுகைல் (20), அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெயிண்ட் அடிக்கும் வேலை

போலீசார் நடத்திய விசாரணையில் கைதானவர் உத்தரபிரதேச மாநிலம் தசாராம்புரா பகுதியை சேர்ந்த லியாகத் அலி என்பவருடைய மகன் சுகைல், இவர் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சுகைல் உத்தரபிரதேசத்தில் இருந்து தப்பி ஓடி தாவணகெரே வந்து, ஹரிஹரா பண்ணிகோடுவில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இருந்ததும், தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அவர் ஒரு தொழிற்சாலையில், பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

பகீர் வாக்குமூலம்

கைதான சுகைல் மீது ஹரிஹரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுகைல் துமகூரு போலீசில் நேற்று முன்தினம் மாலை ஒப்படைக்கப்பட்டார். அதையடுத்து நேற்று காலை போலீசார், பயங்கரவாதி சுகைலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கைதான சுகைல் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், கைதான சுகைல் பாகிஸ்தானின் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்ததும், இந்தியாவில் பல இடங்களில் தனது கூட் டாளிகளுடன் சேர்ந்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டதும் தெரியவந் துள்ளது. குறிப்பாக அவர், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது.

பயங்கரவாதிகளுடன் தொடர்பு

மேலும் சுகைல், பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகளுடன் வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்தது அம்பலமானது. அவரது செல்போனில் பாகிஸ்தான் குறியீடுடன் 'ரானா பாய்' என்ற பெயரில் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து உள்ளோம். மேலும், 'மேமோன் மற்றும் ஜுட்டு- 333' போன்ற பயங்கரவாத குழுக்களில் இணைந்து சுகைல் செயல்பட்டதும், பயங்கரவாத குழுக்களுக்கு ஆட்களை சேர்க்க முயற்சி செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் சுகைல் பயங்கரவாதிகளை போல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைகளில் ஏந்தியபடி எடுத்த புகைப்படங்களும் அவரது செல்போனில் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.