ஜம்மு
துப்பாக்கி குண்டு காயம் விரைவில் ஆற பயங்கரவாதி மூசா, காட்டில் புதுவித சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 26 பேரை பலி கொண்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட முகமது ஆசிப் என்ற ஹசீம் மூசாவை, மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தின் யூஸ்மார்க் பகுதியில் இந்த வார தொடக்கத்தில் நடந்த என்கவுன்ட்டரில் இந்திய ராணுவம் சுட்டு கொன்றது.
பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைக்கான படையின் முன்னாள் வீரரான அவர், பின்னாளில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தலைமை தளபதியாகவும் இருந்துள்ளார். இவர், காஷ்மீரில் அடர்ந்த காடுகளில் இருந்தபோது, துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டால், அது விரைவில் குணமடைவதற்காக தூய தேனை கொண்டு ஆயுர்வேத சிகிச்சையை எடுத்து வந்திருக்கிறார்.
ஜம்முவின் ரஜோரி பகுதியில் 45 நாட்களாக நடந்த ஆபரேஷன் ஷெருவாலியின்போது, மூசாவும், கூட்டாளி யாசிரும் காட்டுக்குள் சிக்கி கொண்டனர். துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டதும் அவரால் வெளியே வர முடியவில்லை. மருத்துவ சிகிச்சையும் பெற முடியவில்லை. மறுபுறம் இந்திய ராணுவத்தின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருந்தது.
அப்போது, திசு விரைவில் குணமடைவதற்காகவும் மற்றும் காட்டு பகுதியில் தொற்றை தடுக்கவும் அவர் இந்த தேன் சிகிச்சையை எடுத்திருக்கிறார். யாசிர் மரணமடைந்தபோது, கிடைத்த செல்போனில், மூசா தேனை தடவி சிகிச்சை எடுத்து கொண்ட புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மூசா, காயம்பட்ட புகைப்படங்களை பாகிஸ்தானிய கூட்டாளிகளுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் அளித்த அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தேன் சிகிச்சையை மூசா எடுத்திருக்கிறார்.
காஷ்மீரில் 12-க்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட மூசா 5 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பின்னர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.