தேசிய செய்திகள்

சுமார் 10 டன் நிவாரணப் பொருட்களுடன் 3-வது விமானம் நேபாளத்திற்கு புறப்பட்டது

நேபாளத்தில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உள்ளூர் அதிகாரிகள் பேரிடரை சமாளிக்க போராடி வருகின்றனர்.

புதுடெல்லி,

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்கு உதவும் வகையில் இந்தியா சார்பில் 3-வது கட்டமாக விமானம் மூலம் 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

நிலநடுக்கம்

இந்தியாவின் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து உற்பத்தியாகும் போத கோஷி ஆறு நேபாளம் வழியாக இந்தியாவின் பீகார், உத்தரபிரதேச மாநிலங்கள் வழியாக சமவெளிகளில் பாய்கிறது. திபெத்தில் நேற்று முன்தினம் மலைப்பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பிரமாண்ட பனிப்பாறைகள் சரிந்து அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு நீர் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் கலந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்தியா உதவி

இதனால், அதன் வழியில் இருந்த பாலங்கள், கட்டிடங்கள், சாலைகள் அடித்து செல்லப்பட்டன. இந்த திடீர் பேரழிவில் இந்தியர்கள் உள்பட பலர் மாயமாகினர். பிரதமர் மோடி, நேபாள பிரதமர் பலேந்திர ஷாவுடன் தொலைபேசியில் பேசி, நிலைமையை சமாளிக்க அனைத்துவிதமான மனிதாபிமான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

அதன்படி பேரழிவுக்கு உதவும் நோக்கில் இந்திய அரசு நேற்று முன்தினம் 10 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது. மேலும் அந்த நாட்டின் நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், 37½டன் மனிதாபிமான பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவு பொட்டலங்களுடன் 2-வது கட்டமாக ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

முறைப்படி ஒப்படைப்பு

இந்த நிவாரணப் பொருட்களில் தற்காலிக முகாம்கள், போர்வைகள், சுகாதார பொருட்கள், சூரிய ஒளி விளக்குகள் மற்றும் மருந்துகள் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் அடங்கும். நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் வஸ்தவா, நேபாளத்தின் கலாசாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி கடக் ராஜ் பவுடலிடம் இந்த உதவி பொருட்களை முறைப்படி ஒப்படைத்தார்.

3-வது விமானம்

இந்நிலையில் சுமார் 10 டன் நிவாரணப் பொருட்களுடன் 3-வது C-130J விமானம் நேபாளத்திற்குப் புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், உள்கட்டமைப்பு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான குடும்பங்களை இடம் பெயர செய்துள்ளது. பல மாகாணங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உள்ளூர் அதிகாரிகள் பேரிடரை சமாளிக்க போராடி வருகின்றனர்.

இந்தியாவின் இந்த உதவி அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அதன் நீண்ட கால கொள்கையின் ஒரு பகுதியாகும். இக்கொள்கையின் கீழ், இந்தியா அவசர காலங்களில் அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அடுத்த சில நாட்களில் இந்தியா மேலும் நிவாரண பொருட்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை மந் திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில், “10 டன் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் மூன்றாவது விமானம் காத்மாண்டுவிற்குப் புறப்பட்டுள்ளது. இந்த உதவிகளில் கையடக்க ஜெனரேட்டர் தொகுப்புகள், கண்ணியக் கருவிகள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.

சுரங்கப்பாதை மீட்புப் பணிகளுக்காக, மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உளவுப் பிரிவு அடங்கிய 11 பேர் கொண்ட குழுவும் விமானத்தில் உள்ளது.

நேபாளத்தின் தற்போதைய நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது” என்று அதில் பதிவிட்டுள்ளார்.