தேசிய செய்திகள்

‘பா.ஜ.க. ஆங்கிலேயர்களைப் போல் மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது’ - காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி

பா.ஜ.க.வை எதிர்க்க இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தங்களை எதிர்ப்பவர்களை பலவீனப்படுத்த மத ரீதியான பிளவுகளை உருவாக்குவதில் பா.ஜ.க.வும், அதன் துணை அமைப்புகளும் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களைப் போல் மக்களைப் பிரித்தாளும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, நாட்டின் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆங்கிலேயர் காலத்து கொள்கைகளை பா.ஜ.க.வின் தற்போதைய அணுகுமுறைகளுடன் ஒப்பிட்டு பேசினார். பல்வேறு சமூகங்களிடையே வேறுபாடுகளை உருவாக்கி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை பலவீனப்படுத்த அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முயன்றதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பேசிய அவர், "பா.ஜ.க.வும், அதன் துணை மற்றும் தாய் அமைப்புகளும் ஆங்கிலேயர்கள் செயல்பட்டதைப் போலவே செயல்படுகின்றன. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்தி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை பலவீனப்படுத்த ஆங்கிலேயர்கள் முயன்றனர். அதேபோல, தனக்கு எதிரான எதிர்ப்பை பலவீனப்படுத்தவும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முடக்கவும் பா.ஜ.க. நாட்டை மத ரீதியாகப் பிரித்து வருகிறது.

மகாத்மா காந்தி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்தார். அதேபோல, நாட்டின் வளர்ச்சிக்காகவும், நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி செய்யும் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகவும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது” என்று தெரிவித்தார்.