தேசிய செய்திகள்

தெலுங்கானாவின் வளர்ச்சி பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்கும் : பிரதமர் மோடி

தெலுங்கானா மாநில உருவாக்க தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தெலங்கானா மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

புது டெல்லி,

ஆந்திர பிரதேசம்

1956 ஆம் ஆண்டில், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், தெலுங்கு பேசும் தெலுங்கானா பகுதி ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா இரண்டுமே தெலுங்கு பேசும் பகுதிகள் என்றாலும் மொழிவழக்கிலும், கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளங்களிலும் இரண்டு பகுதி மக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

கிளர்ச்சி நடைபெற்றது

வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றில் சம பகிர்வு வாக்குறுதியளிக்கப்பட்டே ஆந்திராவுடன் தெலுங்கனா பகுதி இணைந்தது. ஆனால் ஆந்திராவுடன் இணைந்த பின்னர் தங்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என தெலுங்கானா பகுதியில் வசிக்கும் மக்கள் கருதினர்.

இதனால் 1960 முதலே தெலுங்கானா தனி மாநில கோரிக்கை எழுந்தது. இதற்காக பல போராட்டங்கள் நடந்தன. பலர் உயிர் தியாகம் செய்தனர். குறிப்பாக 1969 ஆண்டு தெலங்கானா பகுதியில் மிகப்பெரிய கிளர்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள், தொழிலாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தெலுங்கானா உருவானது

ஒரு இயக்கமாக தொடர்ந்து வந்த இந்த கோரிக்கையை 2001ல், கே. சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) முன்னெடுத்து சென்றது. இந்த இயக்கம் 2009 மற்றும் 2013-க்கு இடையில் தீவிரம் அடைந்தது.

இறுதியாக தெலுங்கானாவை தனி மாநிலமாக மாற்ற நாடாளுமன்றத்தால் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜூன் 2, 2014 அன்று தெலுங்கானா உருவானது.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புதுமை படைப்பாற்றல்

தெலுங்கானா மாநில உருவாக்க நாள் எனும் இந்த சிறப்புமிக்க நன்னாளில், தெலுங்கானா மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். தெலுங்கானா மக்கள், புதுமை படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவு உணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். தெலுங்கானா மாநிலம், துணிச்சலும் உறுதியும் நிறைந்த தனது மகத்தான கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கு புகழ்பெற்றது.

தெலுங்கானாவின் வளர்ச்சி

வளர்ச்சியடைந்த இந்தியா எனும் நமது கனவை நனவாக்கும் வகையில், தெலுங்கானாவின் வளர்ச்சி பயணத்திற்குத் துணை நிற்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. தெலுங்கானா மாநில மக்களின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றிடவும் நான் பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.