புதுடெல்லி,
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரெயில் சேவை 2027-ம் ஆண்டு தொடங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக குஜராத் மாநிலம் சூரத் முதல் வாபி வரையிலான வழித்தடத்தில் ரெயில் இயக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை ஐ.சி.எப். மற்றும் பெமல் நிறுவனம் இணைந்து மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய பி-28 ரக ரெயிலை தயாரித்து வருகின்றன. இதன் முதல் பெட்டிக்கான சட்டகம் தயாரிக்கப்பட்டு, கட்டமைப்பு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. முதல் புல்லட் ரெயில் சேவை 2027-ம் ஆண்டு தொடங்கும். குஜராத் நகரின் சூரத்-வாபி இடையே முதற்கட்டமாக இந்த புல்லட் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தாமதமானதற்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அரசு அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் முக்கிய காரணம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.