புதுடெல்லி,
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ரூபே கார்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யும்போது அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்தும் இந்தியாவிலேயே தக்க வைக்கப்படுகிறது. அதே நேரம் மற்ற கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்களுக்கான கட்டணத் தொகை வெளிநாடுகளுக்கு போய் விடுகிறது. ரூபே கார்டு மூலம் கிடைக்கும் கட்டணம் இந்தியாவின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும், கட்டமைப்பு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பணம் செலுத்துவது பற்றி முதலில் நான் பேசியபோது அதுபற்றி நாட்டில் பலரும் என்னை கேலி செய்தனர். குறிப்பாக தலையணைகளுக்கு அடியில் பணத்தை பதுக்கியவர்களும், இடைத்தரகர்களும் பெரிதும் கிண்டல் செய்தனர்.
இத்திட்டம் வெற்றிகரமாக மக்களை சென்றடைந்தது குறித்து இங்கே பயனாளிகள் தெரிவித்த கருத்துகள் இது போன்றவர்களுக்கு தகுந்த பதிலடி தந்துவிட்டது.
இப்போது, சிலர் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்ற வதந்தியை கிளப்பிவிட்டு வருகின்றனர். எனது திட்டம் இடைத்தரகர்களுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இதுபோன்ற சதிவேலையில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் இடைத்தரகர்களுக்கு எதிரான போர் ஆகும். இத்திட்டத்தின் மூலம் கருப்பு பணமும், கள்ளச்சந்தையும் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. இடைத்தரகர்கள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டு உள்ளனர்.
ரெயிலில் டிக்கெட்டுகளை எடுப்பது முதல் கட்டணங்களை செலுத்துவது, ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு சேவைகளை பெறுவது சிறப்பான முறையில் கையாளப்படுவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியை பறைசாற்றும்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. சிறு நகரங்களுக்கும், கிராமப்புற பகுதிகளுக்கும் ஏராளமான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. இந்த மாற்றம் மக்களுக்கு தெரிகிறதோ, இல்லையோ நிச்சயமாக இந்த நாடு மாற்றம் அடைந்து வருகிறது.
இத்திட்டம் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக உள்ளது. மேலும் சீர்திருத்தம், செயல்திறன், வடிவத்தை மாற்றுதல் ஆகியவற்றை உணரவைப்பதாகவும் இருக்கிறது.
ரூபே கார்டு திட்டம் இன்று தேசியமாகவும் மாறி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 50 கோடி பேர் ரூபே கார்டை பெற்றுள்ளனர். எனவே இதைப் பயன்படுத்துவதும் ஒரு வகையில் தேசத்துக்கு சேவையாற்றுவதுதான். ரூபே கார்டு டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த அட்டை பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் சிங்கப்பூர் சென்றபோது நானும் இந்த அட்டையை பயன்படுத்தி சில பொருட்களை வாங்கினேன்.
தொழில்நுட்ப பலன்கள் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே செல்லாமல் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
15 மாநிலங்களில் 23 மின்னணு சாதனங்கள் தயாரிப்பு மையங்கள் நிறுவப்பட்டு இருப்பதன் மூலம் 4.5 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது தவிர அயலக சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதற்காக ரூ.1 லட்சம் வரை கடன் உதவியும் அளிக்கப்படுகிறது.
தேசிய அறிவாற்றல் ஒருங்கிணைப்பு மூலம் 1,700 கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், நூலகங்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், 5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றனர். பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் மை கவ் தளத்தில் 60 லட்சம் தன்னார்வலர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.