அயோத்தி,
அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு வழக்கில் போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையில் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அவினாஷ் சுக்லா குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் மகேஷ்கஞ்ச் அருகே உள்ள பாபுபூர் நாரியாவா கிராமத்தைச் சேர்ந்த அவினாஷ் சுக்லா, கடந்த சில ஆண்டுகளாக ராமர் கோவிலின் காணிக்கை எண்ணும் பிரிவில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் காணிக்கை தொகையில் இருந்து சுமார் ரூ.20 லட்சம் வரை முறைகேடாக எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், திருடப்பட்ட பணத்தை அவினாஷ் சுக்லா தனது குடும்பத்தினரும் உறவினர்களும் பயன்படுத்தும் வகையில் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அண்ணனின் திருமணத்திற்கு ரூ.6 லட்சம் வழங்கியுள்ளார்.
மற்றொரு சகோதரருக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மொத்தமாக ரூ.19 லட்சம் பகிர்ந்தளித்துள்ளார்.
தனது காதலிக்கு ஒரு ஐபோன் வாங்கிக் கொடுத்ததுடன், ரூ.2.5 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு பரிசாக அனுப்பியிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
திருடப்பட்ட காணிக்கை பணத்தை பயன்படுத்தி, அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் பல்வேறு சொத்துகளை வாங்கியிருப்பதாகவும், தனது சொந்த கிராமத்தில் பிரமாண்ட வீடு கட்டியதுடன் புதிய கார் ஒன்றையும் வாங்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவினாஷ் சுக்லாவிடம் இருந்து ரூ.20.39 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.1.06 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வாறு கையாளப்பட்டது, யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது, எந்தெந்த சொத்துகள் வாங்கப்பட்டன என்பது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக வங்கி கணக்குகள், பணப் பரிமாற்ற விவரங்கள், சொத்து ஆவணங்கள் மற்றும் நிதி தொடர்பான அனைத்து பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. உறுதியான ஆதாரங்களை திரட்டி விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.