புதுடெல்லி,
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியை கண்டித்தும் பீகாரில் நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசுடன் மாணவர்கள் மோதினர். கல்வீச்சு, வாகனங்கள் சூறை, கண்ணீர்புகை வீச்சு ஆகிய சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பீகாரில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“அரசின் ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக அப்பட்டமான கொலைவெறியைக் கொண்டுள்ளது. பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே-47 ரகத் துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படாது, அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற மோடியின் வாக்குறுதி எங்கே போனது? மாறாக, அவர்கள் மீது கொடிய தாக்குதல்களும் மிருகத்தனமும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பீகாரில் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளும் சுடப்பட்டன. உத்தர பிரதேசம், மேற்கு வங்காள்ம், பீகார் மற்றும் டெல்லி என அனைத்து இடங்களிலும் இதே நிலைதான்.
நான் முன்பே கூறியுள்ளேன், இந்த அரசாங்கம் நேர்மையற்றது. உண்மையான சீர்திருத்தம் செய்வது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் தங்கள் வார்த்தைகளிலிருந்து பின்வாங்கி, மாணவர்களின் குரல்களை அடக்க அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்துவார்கள். மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். மாணவர்கள் மீது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.