புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் சுமார் 50 நாட்களாக போராடி வருகின்றனர். கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஏற்கனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
அத்துடன் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 4 உறுப்பினர் குழு ஒன்றையும் அமைத்து உள்ளது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் குறைகளை இந்த குழு முன் தெரிவிக்குமாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த இந்த குழு அரசுக்கு ஆதரவான குழு என குற்றம் சாட்டியுள்ள விவசாய அமைப்புகள், எனவே இந்த குழு முன் ஆஜராகமாட்டோம் என அறிவித்தன.
இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மதியம் 12 மணியளவில் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தன.
விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தைகள் டெல்லியில் இன்று நடந்து முடிந்தது. ஆனால் இந்த 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பேச்சுவார்த்தை குறித்து மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும் போது.
விவசாய சங்கங்களுடனான இன்றைய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இல்லை. சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழுவின் முன் அரசாங்கம் தனது தரப்பை முன்வைக்கும். ஜனவரி 19 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.பேச்சு வார்த்தை மூலம் ஒரு தீர்வை எட்டுவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம். இந்த சூழ்நிலையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளது என கூறினார்.
விவசாய சங்கம் ஒன்றின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட், கூறும் போது
மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் எம்.எஸ்.பி உத்தரவாதத்தை ரத்து செய்வதற்கான எங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து உள்ளன. சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழுவுக்கு நாங்கள் செல்ல மாட்டோம். நாங்கள் மத்திய அரசுடன் மட்டுமே பேசுவோம் என கூறினார்.