தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பதவி விவகாரம்... வேறு எதுவும் கேட்க முடியாதா? நிருபர்களிடம் ஆவேசப்பட்ட சித்தராமையா

கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிட கட்டளைக்கு நானும், சிவக்குமாரும் கட்டுப்பட வேண்டும் என சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். எனினும், 2023-ம் ஆண்டு அக்கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியானது. கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத சூழலில், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே இருந்தது.

எனினும், நெருக்கடியான காலகட்டத்தில் சித்தராமையா எனக்கு துணை நின்றவர். சித்தராமையாவின் நெருக்கடியான காலகட்டத்தில் அவருக்கு நான் துணை நின்றேன் என டி.கே. சிவக்குமார் கூறினார். இதன்பின்னர் இந்த விவகாரம் பெரிதும் பேசப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய கட்சி மேலிடம் உத்தரவு அளித்து விட்டது என சித்தராமையாவின் மகனான எம்.எல்.சி. யதீந்திரா சமீபத்தில் கூறினார். இதனால், அந்த பூசல் ஏற்பட்டது உண்மைதான் என ஒருபுறம் உறுதியானதுடன், இந்த விவகாரம் மீண்டும் பரபரப்படைந்தது. இதுபற்றி டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்டபோது, இந்த விவாதத்திற்குள் மீண்டும் செல்ல மறுத்து விட்டார்.

ஆனால் அந்த கேள்விக்கு, காலம் பதில் சொல்லும் என்று பரபரப்பு தொடரும் வகையிலான பதிலை கூறி சென்றார். இந்த சூழலில், கர்நாடகாவில் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர பட்ஜெட் கூட்டம் நேற்று நடந்தது. இதில் டி.கே. சிவக்குமார் பங்கேற்கவில்லை. இதுபற்றி குறிப்பிட்ட முதல்-மந்திரி சித்தராமையா, அவர் அசாம் தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியினரின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு சென்றுள்ளார் என்றார். அதனால், அவர் இல்லாமலேயே பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என கூறினார்.

இந்த நிலையில், முதல்-மந்திரி பதவி பற்றி சிவக்குமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் கூறும்போது, அது விசயத்தில் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளோம். சற்று தாமதம் ஆனாலும், முதல்-மந்திரி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்றார்.

இதனை குறிப்பிட்டு நிருபர்கள் சித்தராமையாவிடம் கேட்டபோது, முதல்-மந்திரி பதவி விவகாரத்தில், கட்சி மேலிட கட்டளைக்கு நானும், சிவக்குமாரும் கட்டுப்பட வேண்டும் என்றார். தலைமை மாற்றம் தவிர, வேறு எதுவும் உங்களால் கேட்க முடியாதா? என கோபம் அடைந்த அவர், நீங்கள் வேறெதுவும் கேட்பதில்லை.

இதனை மட்டுமே கேட்கிறீர்கள். இந்த பேச்சை தொடங்கி 3 மாதங்களாகி விட்டன. இதனை தயவு செய்து மீண்டும் என்னிடம் கேட்காதீர்கள் என சற்று வருத்தத்துடனேயே கூறினார்.

ஆனால், சுரேஷ் கூறிய விசயங்களை குறிப்பிட்டே நாங்கள் கேட்கிறோம் என நிருபர்கள் கூறியபோது, அப்படி என்றால் யார் கூறினார்களோ, அவர்களிடம் சென்று கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான் கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு சிவக்குமார் மற்றும் சில காங்கிரஸ் உறுப்பினர்களின் பயண திட்டம் பற்றி கேட்கப்பட்டதற்கு, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார். அவர்கள் சொந்த செலவில் தனிப்பட்ட முறையில் செல்வார்கள் என்றார். இதேபோன்று கர்நாடக மாநில பட்ஜெட் பற்றிய தேதியை சிவராத்திரி திருவிழாவுக்கு (பிப்ரவரி 15-ந்தேதிக்கு) பின்னர் அறிவிப்பேன் என்றார்.