தேசிய செய்திகள்

படம் இன்னும் முடியவில்லை புரோ.. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு பதிவு

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், மு.க. ஸ்டாலினை சந்திக்க இன்று சென்னை வருகை தருகின்றனர்.

புதுடெல்லி

படம் இன்னும் முடியவில்லை புரோ என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு பதிவை வெளியிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில், எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சில கட்சிகள், ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளன.

எம்.பி.க்கள் கூட்டம்

இதன்படி, தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போது, நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வடமாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான சதவீதத்தை குறைத்திருப்பார்கள்.

ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தற்போது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்கு பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்திருப்பார்கள்.

சென்னை வருகை

அது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாக அமைந்திருக்கும். அதை நாம் தடுத்து விட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது என்று பேசினார். இதனால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை தி.மு.க. வெளிப்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னைக்கு வருகை தருகிறார். அவருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இன்று சென்னைக்கு வருகை தருகின்றனர்.

சகோதரர் ஸ்டாலின்

இதில், மு.க. ஸ்டாலினை அவர்கள் நேரில் சந்தித்து பேசுவார்கள் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தலாம் என தகவல் தெரிவிக்கின்றது.

சோனியா, ராகுல் உள்ளிட்டோரின் வருகையை முன்னிட்டு, கட்சியினருடன், மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சகோதரர் ஸ்டாலின் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான சக்திகளை ஒரு பாறை போல உறுதியாக எதிர்த்து நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பதில்

இந்த பதிவுக்கு மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பதிலில், தமிழ்நாட்டின் நலன்களையும், நமது தமிழ் மக்களின் நலன்களையும் முதன்மையாக கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம். இந்த பாதையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினை சகோதரர் என்று அழைத்த ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், நீங்கள் குறிப்பிட்ட அந்த சகோதரரின் முதுகில்தான் வெட்கமே இல்லாமல் குத்தினீர்கள் மிஸ்டர் ராகுல் என்று பதிவிடப்பட்டுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ்

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், படம் இன்னும் முடியவில்லை புரோ என பதிவிட்டு உள்ளார். தமிழக முதல்-அமைச்சர் விஜய் அடிக்கடி உச்சரிக்கும் புரோ என்ற வார்த்தையை குறிப்பிட்டு, ஜெய்ராம் ரமேஷ் பதிவை பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஆட்சியமைக்க த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், மு.க. ஸ்டாலினை சந்திக்க இன்று சென்னை வருகை தரும் நிலையில், ஜெய்ராம் ரமேஷின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT