தேசிய செய்திகள்

‘பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் தேசம் தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்டது’ - அமித்ஷா

புதிய இந்தியா தனது அடையாளத்தை நம்பிக்கையுடன் நிலைநாட்டி வருகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் நீண்ட நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 4,398 நாட்கள் பதவியில் இருந்த நிலையில், பிரதமர் மோடி தனது மூன்றாவது தொடர்ச்சியான பதவிக்காலத்தில் தொடர்ந்து 4,399 நாட்கள் பதவியில் நீடித்து வருகிறார். பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சாதனை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-

“இந்தியாவில் மிக நீண்ட காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். மோடியின் இந்த 12 ஆண்டுகள், இந்தியாவின் பெருமையை மீட்டெடுப்பது, கலாசார மறுமலர்ச்சி, மற்றும் தேசத்தை அடிமைத்தன மனப்பான்மையிலிருந்து விடுவிப்பது பற்றியதாகவே இருந்துள்ளன.

பிரதமர் மோடியின் ஆட்சியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது, மூன்று புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன, புதிய கல்விக் கொள்கை மூலம் தாய்மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கு வழிவகுத்தது, மேலும் தற்சார்பு இந்தியா ஒவ்வொரு இந்தியனின் தீர்மானமாக மாறியது.

இந்த 12 ஆண்டுகளில், ஒருபுறம், நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டன, 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, ராமர் கோவில் கட்டப்பட்டது, நக்சல் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது, ஒவ்வொரு பயங்கரவாத சம்பவத்திற்கும் தகுந்த பதிலடி கொடுத்து பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது; மறுபுறம், தேசம் தனது தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, அதன் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் திறன்களில் பெருமை கொள்ளக் கற்றுக்கொண்டது. குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்கள் இழந்த சுயமரியாதையையும், கவுரவத்தையும் மீட்டெடுத்ததே மோடியின் மாபெரும் சாதனையாகும்.

இன்று, புதிய இந்தியா ஒவ்வொரு உலகளாவிய தளத்திலும் தனது அடையாளத்தை நம்பிக்கையுடன் நிலைநாட்டி வருகிறது. மேலும் திறமையான, சக்திவாய்ந்த, புதிய இந்தியாவின் எழுச்சியை உலகம் கண்டு வருகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.