புதுடெல்லி,
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) குறைவான எடைகொண்ட செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும், 2 முதல் 2 டன் எடைகொண்ட செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் விண்ணில் செலுத்தி வருகிறது. இதைவிட அதிக எடைகொண்ட செயற்கைகோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்கும் விதமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்து இருக்கிறது.
இந்த வகை ராக்கெட்டின் முதல் பயணம் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. மாலை 5:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியதற்கு அர்ப்பணிப்புள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விண்வெளி துறையில் இந்தியா அடுத்த தலைமுறை நோக்கி செல்கிறது. தேசமே பெருமை கொள்கிறது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.