பெங்களூரு,
மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து கட்சி மேலிடம் தீர்மானிக்கும் என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை 14 மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, சலீம் அகமது எம்.எல்.சி.யை மந்திரி ஆக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த டி.கே.சிவக்குமார் பேசுகையில் கூறியதாவது:-
“சலீம் அகமதுவுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். உங்களின் கோரிக்கையை கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்கிறேன். முதல்-மந்திரி பதவி ஒப்பந்தம் பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும். அதன்படி கட்சி மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியது. சலீம் அகமதுவுக்கு நல்ல வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
நான், சலீம் அகமது, வினய்குமார் சொரகே ஆகியோர் மாணவர் காங்கிர சில் பணியாற்றியவர்கள். நாங்கள் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்தவர் கள். சலீம் அகமதுவை எம்.எல்.சி. ஆக்கும்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் அவருக்கு வாய்ப்பு வழங்கினேன். உங்களை போல் மற்ற சமூகத்தினர் மந்திரி பதவி கேட்கிறார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில் அரசியல் முடிவை எடுப்பது கடினம். நான் எதிர்கொள்ளும் சவாலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்சி மேலிடத்துடன் ஆலோசித்து தீர்மானிப்பேன். மூத்த தலைவர்கள் பலருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கவில்லை. இளைஞர்களுக்கு பதவி வழங்குமாறு கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ளேன். மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து கட்சி மேலிடம் தீர்மானிக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.