ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' அழகிப் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, போட்டியில் பங்கேற்கும் அழகிகளை ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025’ பட்டம் வென்ற மணிகா விஸ்வகர்மா, அழகிப் போட்டி நிர்வாகக் குழு இயக்குநர் நிகில் ஆனந்த் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிகா விஸ்வகர்மா, டெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “மக்களின் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே அரசியல் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மிகவும் அதிர்ச்சியளித்தது. அது லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நம்பிக்கையை தகர்த்தது. தற்போது நடைபெறும் மாணவர்களின் போராட்டம் என்பது நீதிக்கான கோரிக்கை. அவர்களின் குரல் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பதில் மிகவும் தாமதமாக வந்துள்ளது. அரசு ஆரம்பத்திலேயே இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.