புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள கல்காஜி பகுதியை சேர்ந்தவர் அனூப் நருலா. இவருக்கு சமீபத்தில் ‘3 எப்’(3F) என்ற டேட்டிங் செயலி மூலம் ஷெர்ரி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் அனூப் நருலாவிடம் நன்றாக பேசி பழகியுள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் அனூப் நருலாவை நேரில் சந்திக்க வேண்டும் என ஷெர்ரி கூறியுள்ளார். இளம்பெண் ஒருவருடன் ‘டேட்டிங்’ செல்லப்போகிறோம் என்ற ஆசையில் அனூப் நருலா, அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு ஷெர்ரி மட்டும் தனியாக வரவில்லை. அவருடன் 3 ஆண்கள் காரில் வந்திருந்தனர்.
அவர்கள் அனூப் நருலாவை மிரட்டி காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரை அடித்து மிரட்டி, அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். பின்னர் அனூப்பை அவர்கள் சாலையோரம் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதோடு, இந்த விஷயத்தைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் அனூப் நருலா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஹர்லீன் கவுர் என்ற பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். அதோடு, அவருடன் சேர்ந்து செயல்பட்ட நவோஜித், சாஹில் மற்றும் சஞ்சய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் ஹர்லீன் இதுபோல் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வாலிபர்களுடன் பழகி வந்துள்ளார் என்றும், பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து அவரது ஆண் நண்பர்களின் உதவியுடன் அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.