பாட்னா,
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வகுப்பறையின் கூரை சரிந்து விழாமல் இருக்க மேசைகள், பெஞ்சுகள் மற்றும் செங்கற்கள் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ள அவல நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பீகார் மாநிலம் அலினகர் தொகுதிக்கு உட்பட்ட கிரத்பூரில் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் கட்டிடத் தூண் ஒன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிடத்தின் மேல் கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டது.
கூரை முழுமையாக சரிந்து விழுவதைத் தடுக்க, வகுப்பறையில் இருந்த மர மேசைகள், பெஞ்சுகள் மற்றும் செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கூரைக்கு தற்காலிகமாக முட்டுக் கொடுத்து வைத்துள்ளனர்.
இந்த ஆபத்தான சூழ்நிலை காரணமாக, பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை கொட்டகையிலும் திறந்தவெளியிலும் அமர வைக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள், மொத்தம் 191 மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வரும் நிலையில், அனைவரின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 1983-ம் ஆண்டு 'ஆபரேஷன் பிளாக் போர்டு' திட்டத்தின் கீழ் இந்த தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் இடியும் நிலைக்கு வந்துள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.