பெங்களூரு,
கர்நாடக அரசு பெங்களூரு தெற்கு மாவட்டம் கனபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதை ஆய்வு செய்த மத்திய நீர் ஆணையம், அதில் சில குறைபாடுகளை சுட்டிக் காட்டி அதை சரிசெய்து மீண்டும் அறிக்கையை அனுப்பி வைக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“நாங்கள் மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளோம். இதை தடுக்க தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. கர்நாடக அரசு இந்த திட்டத்தை நிச்சயம் செயல்படுத்தும். மேகதாது திட்டத்துக்கு அண்டை மாநி லங்கள் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசே கூறியுள்ளது. நாங்கள் விரிவான திட்ட அறிக்கையில் திருத்தம் செய்து இதை வருகிற 15-ந் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். இந்த திட்டத்தை தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.
இதற்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. இந்த திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு 2 முறை வழக்கு தொடர்ந்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. அதனால் நாங்கள் மேகதாது திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்து விரிவாக விவாதிக்க உள்ளோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.