தேசிய செய்திகள்

அரசு வேலை நியமன ஆணை ரத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு நாளை விசாரணை

கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

அரசு வேலை நியமன ஆணை ரத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

கரூர் சம்பவம்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சம்பவம் தொடர்பாக பலரிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கான நியமன ஆணைகள் கடந்த மாதம் 10-ந்தேதி வழங்கப்பட்டன. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த சீனி முகமது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மேல்முறையீடு மனு

இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதற்கான அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.பி.பார்த்தி வாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT