புதுடெல்லி,
மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட் டணி, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. 3-வது ஆண்டில் கால் பகுதியை கடந்து விட்டது. இருந்தாலும் இப்போதே, 2029-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி விட்டது. கடந்த தேர் தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்தமுறை அறுதிப்பெரும்பான்மையை பெறுவதற்கான யுக்திகள் வகுக்கப்பட்டு, அதன்படி பணிகள் நடந்து வருகின்றன.
அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், அரசின் சாதனைகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புரை செய்தல், இளம் தலைமுறையினரை வசப்படுத்துதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.
கட்சியை வலுப்படுத்தும் பணிக்காக தற்போது சில மந்திரிகள், கட்சிப்பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சிலர் பதவி விலகி உள்ளனர். இதற்கிடையே மாற்றுக்கட்சிகளில் இருந்து பல எம்.பி.க்கள் பா.ஜனதா பக்கம் வந்து இருக்கிறார்கள். இந்த மாற்றங்களின் காரணமாக மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக இதற்கு முன்பு அடிக்கடி தகவல்கள் வெளிவந்தன. ஆனால் எதுவும் உறுதி ஆகவில்லை.
இந்த நிலையில் அதுதொடர்பான ஒரு யூகத்தை தற்போதைய ஒரு தகவல் மீண்டும் வெளிப்படுத்துகிறது. அதாவது, மத்திய மந்திரிசபை பெரும்பாலும் புதன்கிழைதோறும் நடைபெறுவது வழக்கம். ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு ஒப்புதல்கள் வழங்கப்படும். இதில் கூடுதல் விஷயங்கள் விவாதிக்கப்பட்டால் கூட்டத்தின் காலநேரம் நீட்டிக்கும்.
ஆனால் எப்போதாவதுதான், கூட்டம் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும். அதுபோல இந்த வாரத்தின் மந்திரிசபை கூட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளையும் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டம் ஒரு பெரிய ஆலோசனை கூட்டமாக (சிந்தனை முகாம்) நடைபெறும் என கூறப்ப டுகிறது. ஒப்புதல்கள் அளிப்பது மட்டும் இன்றி, கடந்த 2 ஆண்டுகளில் அரசின் பயணம் போன்றவை பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
மேலும் 7 மாநில தேர்தல்கள் வர இருப்பதாலும், பதவி விலகிய மந்திரிகளுக்கு பதில் புதிய மந்திரிகளை நியமிக்க வேண்டும் என்பதாலும் இந்த 2 நாள் கூட்டத்தில் தற்போது உள்ள மந்திரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில மந்திரி சபையை விரிவாக்கம் செய்வது பற்றி முடிவு எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் தொடர்பான ஆலோசனைகளும் முக்கிய இடம்பிடிக்கும் என கூறப்படுகிறது.