போபால்,
உலகில் தற்போது நிலவும் பதற்றம், மோதல் மற்றும் போர் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து அமைதியின் பாதைக்கு திரும்புவதற்கான வழி பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையில் உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 5 நாட்கள் பயணமாக மத்திய பிரதேசம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இந்தூர் வந்தடைந்த திரவுபதி முர்முவை, மத்திய பிரதேச கவர்னர் மங்கு பாய் பட்டேல் மற்றும் முதல் மந்திரி மோகன் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து பேதுல் மாவட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கு ‘பிரம்ம குமாரிகள்’ என்ற ஆன்மீக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, ‘ஆன்மீக விழிப்புணர்வால் பழங்குடியின சமூகத்தை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“பழங்குடி மக்களின் வாழ்க்கையும், மரபுகளும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பறைசாற்றுகின்றன. பழங்குடி சமூகங்கள் பூமி, சூரியன், நீர் மற்றும் மரங்களை வழிபடுகின்றனர். இயற்கையுடனும், அதன் மீதான பக்தியுடனும் பிணைக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையே, தற்போது பதற்றம், மோதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட உலகில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வழியாக உள்ளது.
பழங்குடி சமூகங்கள் சுயமரியாதையுடனும், பொறுமையுடனும் வாழ்கின்றனர். தங்கள் பிரச்சனைகளைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. அவர்கள் எதையும் கேட்பதில்லை; இயற்கையோடு இணைந்து, காலப்போக்கில் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்கள் அமைதியாக வாழவே விரும்புகிறார்கள்.
பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை முறை, ஆன்மிகத்தின் அடிப்படை அம்சங்களுடன் நெருக்கமாக உள்ளது. அவர்களின் வாழ்க்கை முறை ஆன்மீகத்தில் வேரூன்றியுள்ளது. நாம் பழங்குடி சமூகங்களை ஆதிவாசிகள் என்று அழைக்கிறோம். சிலர் அவர்களை வனவாசிகள் என்கிறார்கள்.
மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம் மற்றும் அன்புடன் வாழ பழங்குடி மக்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் வன்முறையிலிருந்து விலகி இருக்கிறார்கள். பண்டைய காலங்களில் அவர்கள் அப்படியே இருந்தனர், இன்றும் அப்படியே இருக்கிறார்கள். ஈரக் களிமண்ணைப் போல, அவர்களை எந்த வடிவத்திலும் வடிவமைக்க முடியும். அவர்கள் இயற்கையையும், பஞ்ச பூதங்களையும் வணங்குகிறார்கள்.
அவர்கள் பூமி, வானம், காற்று, நீர், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றை வழிபடுகிறார்கள். கோவில்களையோ அல்லது தனி வழிபாட்டுத் தலங்களையோ அவர்கள் கட்டுவதில்லை. இன்றைய காலகட்டத்தில், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை எளிமை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.