உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் காணிக்கைப் பணம் முறைகேடாக கையாளப்படுவதாக துறவிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், ராமர் கோவிலில் காணிக்கைப் பணம் எண்ணும் குழுவின் உறுப்பினரான மஹிபால் சிங் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
“ராமர் கோவிலில் காணிக்கைப் பணம் எண்ணும் போது, ஒரு பெட்டியில் 10 பணக் கட்டுகள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வங்கி ஊழியர்கள் உண்மையில் 13 பணக் கட்டுகளை அந்தப் பெட்டியில் வைத்திருந்தனர். இந்த முரண்பாட்டை கவனித்த நான், பெட்டியில் இருந்த பணக் கட்டுகளை மீண்டும் சரிபார்த்தபோது, 10 இருக்க வேண்டிய இடத்தில் 13 கட்டுகள் இருந்தன. இது எவ்வளவு காலமாக நடைபெற்று வருகிறது என்பதை விசாரிக்க கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தேன். பின்னர், காணிக்கைகளை சரிபார்த்து எண்ணுவதற்காக மேலும் 2 பேர் நியமிக்கப்பட்டனர். இருப்பினும், குறைகள் சரிசெய்யப்படவில்லை. அதற்கு பதிலாக என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. அகிலேஷ் யாதவ், “இன்று உலகம் அறிந்துள்ள இந்த விவகாரம் உண்மையில் மிகவும் பழமையானது. ‘டிரஸ்ட்’ என்றால் நம்பிக்கை என்பதே பொருள். எனவே, இந்த குற்றச்சாட்டை அறக்கட்டளையே தீவிரமாக எடுத்துக்கொண்டு நீதித்துறை விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசு ஏன் மவுனம் காக்கிறது? விசாரணை கோரிக்கையைக் கண்டு முக்கியப் புள்ளிகள் அச்சப்படுகிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.